நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Wednesday, March 30, 2011

ஜிமெயில் காப்பு எடுக்கும் மென்பொருள்!

அண்மையில் ஜிமெயில் பயனா்களில் ஏறத்தாள 150,000 பேரின் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டும் அவா்களின் கணக்கு முடக்கப்பட்டும் இருந்தது. இதற்கு காரணம் ஜிமெயிலில் ஏற்பட்ட சிறு குழறுபடி தான்.

என்ன தான் 7.5GB இற்கு மேற்பட்ட இட அளவை ஜிமெயில் வழங்கினாலும் மேலே சொன்னது போன்ற குழறுபடிகளால் ஜிமெயிலை காப்பு (Backup) எடுக்கவேண்டியது அவசியமாகிறது. முக்கியமான மின்னஞ்சல்களை பாதுகாக்கவேண்டுமெனில் வேறு வழியில்லை.

ஆக இந்தப் பதிவில் ஜிமெயிலை காப்பு எடுப்பதற்கென உதவும் மென்பொருள் பற்றியும் அதனைப் பயன்படுத்துவது தொடா்பாகவும் சிறு விளக்கம் தருகிறேன்.

Gmail Backup

முதலில் Gmail Backup மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவல் செயல்முறை இலகுவானது.

நிறுவியதை திறந்து தேவையான விபரங்களை தட்டச்சு செய்யுங்கள். இங்கு நீங்கள் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், காப்பு எடுக்கவேண்டிய கோப்பு (Backup Folder) மற்றும் எந்தத் திகதியிலிருந்து எந்தத் திகதி வரை காப்பு எடுக்கப்படவேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிடவேண்டும். நீங்கள் உங்கள் மின்னஞ்சல்களை முழுமையாக காப்பு எடுக்கவிரும்பினால் Since date என்பதில் நீங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்த திகதியை குறிப்பிடலாம். அப்படியில்லாமல் புதிய மின்னஞ்சல்களை மட்டும் காப்பு எடுக்க விரும்பினால் Newest emails only என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

இறுதியாக காப்பு எடுத்தலை தொடங்க Backup என்ற பொத்தானை அழுத்துங்கள். இந்தச் செயன்முறையானது சிறிது நேரமெடுக்கலாம்.

உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீங்கள் எடுத்த காப்பில் இருந்து மின்னஞ்சல்களை மீள் நிறுவிக் கொள்ளலாம். இதற்கு மேலே சொன்னது போல உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல், காப்பு இருக்கும் கோப்பு போன்ற விபரங்களை குறிப்பிட்டு Restore என்ற பொத்தனை அழுத்துங்கள்.

இறுதியாக ஒரு குறிப்பு. இந்த Gmail Backup ஆனது மின்னஞ்சல்களை .EML வடிவில் காப்பு எடுப்பதால் எந்த ஒரு மின்னஞ்சல்களை பார்வையிட உதவும் மென்பொருளைக் கொண்டும் இதனைப் பார்வையிட முடியும். இன்னொரு விசயம் ஜிமெயில் ஆனது அரட்டை உரையாடல்களை சேமித்து வைத்துக்கொள்கிறது. ஆனால் இந்த Gmail Backup ஆனது அவற்றை காப்பு எடுப்பதில்லை.

நல்லது. இந்தப் பதிவு உங்களுக்கு ஏதேனும் விதத்தில் உதவியிருந்தால் வாக்குப் போட்டு கருத்துச் சொல்லுங்கள்.

Sunday, March 27, 2011

திரைவெட்டுகளை எடுத்தல்–கூகிள் குரோம் நீட்சி!

பதிவுகளை எழுதுபவா்கள் குறிப்பாக கணினி தொடா்பான பதிவுகளை எழுதுபவா்கள் அடிக்கடி திரைவெட்டு (Screenshot) எடுத்து குறிக்கவேண்டியது(Annotate) அவசியமாகிறது.

திரைவெட்டு எடுப்பதற்கென பல மென்பொருட்கள் உலாவினாலும் நான் Photoshop ஐ இவ்வளவு நாளும் பயன்படுத்தி வந்தேன்.  அதாவது விசைப்பலகையில் உள்ள Print Screen என்பதன் மூலம் திரைவெட்டை எடுத்து Photoshop மூலம் தேவையானதை வெட்டி எடுத்து குறித்து வந்தேன்.

அண்மையில் திரைவெட்டுகளை எடுப்பதற்கென கூகிள் குரோம் நீட்சி (Extension) ஒன்றை தரவிறக்கி பயன்படுத்தத் தொடங்கினேன். இப்போது முழுமையாக அதனை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

அந்த கூகிள் குரோம் நீட்சி இது தான்—> Awesome Screenshot: Capture & Annotate

image

இதன் மூலம் பக்கத்தை முழுமையாகவோ பகுதியாகவோ சிறைப்படுத்த(Capture) முடியும். அத்தோடு செவ்வகம்,வட்டம்,அம்புக்குறி,கோடு, எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி தேவையான பகுதிகளை குறிக்க முடியும். அத்தோடு ஒரே கிளிக்கில் தரவேற்றி மற்றவா்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இன்னொரு விசயம் மிகவும் முக்கியமான தகவல்களை(Sensitive Information) நீங்கள் திரைவெட்டில் மறைக்கமுடியும்.

இதன் மூலம் எடுக்கப்படும் திரைவெட்டுக்களை நீங்கள் PNG கோப்பாக சேமித்து பயன்படுத்த முடியும்.

சரி இதனை தரவிறக்க நினைப்பவா்கள் இங்கே அழுத்தவும்.

இந்தப் பதிவு உங்களுக்கு ஏதேனும் விதத்தில் உதவியிருந்தால் வாக்குப் போட்டு கருத்தும் இடுங்கள்.

Saturday, March 26, 2011

Gmail அரட்டையில் Call phone ஐ காணவில்லையெனில்…

கனடாவில் உள்ள ஒருவருடன் பேச வேண்டியிருந்தது. ஓசியா எதில கதைக்கலாம் என்று யோசித்தேன். உடனே நினைவுக்கு வந்தது Google Voice. கனடா மற்றும் அமெரிக்காவுக்கு ஓசியா கதைக்கலாம் Google Voice மூலம். இது பலருக்கும் தெரிந்தது தானே என்று நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் நான் சொல்ல வாற விசயமே வேறு.

அதாவது Google Voice மூலம் கதைக்கலாம் என்று நினைத்து Gmail உள் நுழைந்து Gmail இல் உள்ளமைந்த அரட்டை பகுதிக்குள் (Chat Window – Inbox இற்கு கீழ் இடது பக்கத்தில் இருக்கும்) Call phone என்ற பொத்தானை தேடினேன். என்ன ஒரு ஏமாற்றம்… காணவில்லை.

image

சரி என்ன செய்யலாம் என்று தேடியதில் கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Gmail இன் மொழியை English (UK) என்பதில் இருந்து English (US) இற்கு மாற்றியவுடன் மீண்டும் Call phone பொத்தான் கிடைத்து விட்டது. இதனை செய்ய Mail Settings சென்று General பகுதியின் கீழ் Language என்பதை மாற்றிவிடுங்கள்.

image

அவ்வாறு மாற்றிய பின்னும் Call Phone பொத்தான் கிடைக்கவில்லையெனில் கீழ் வரும் ஏதாவது ஒன்றினால் இருக்கலாம்.

 • சிலா் இது இன்னும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு மட்டுப்படுத்தபட்டதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதனால் Call Phone பொத்தான் இல்லாமல் இருக்கலாம். (ஆனால் நான் கனடாவிலோ அமெரிக்காவிலே இல்லை. எனக்கு வேலை செய்கிறது. ஆகவே இந்தக் காரணத்தை ஒதுக்கி விடலாம்.)
 • நீங்கள் Voice & Video விற்கான சிறுநிரலை (Plugin) உங்கள் கணினியில் நிறுவாமல் இருக்கலாம். அதனை நிறுவ இங்கே செல்லவும்.
 • சில நேரங்களில் நீங்கள் Call Phone என்பதை செயற்படுத்தாமல் இருக்கலாம்.

  image
   

  இதனை செயற்படுத்த Mail Settings –> Chat சென்று Enable outbound voice calling with Google Voice என்பதை செயற்படுத்துங்கள்.

 

யாராவது இது தொடா்பாக முயன்ற அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம். மற்றவா்களுக்கு உதவியாக அமையும்.

Tuesday, March 22, 2011

Google மூலம் Mediafire இல் தேடல்!

தேடுவது ஒரு கலை! நான் சொல்வது தேடு இயந்திரங்களில்(Search Engines) தேடுவதைப் பற்றி. இந்தப் பதிவு கூகிளில் தேடுவது பற்றியது.

அநேகமானவா்களுக்கு Mediafire, Rapidshare, Megaupload போன்ற கோப்பு பகிர்வுத்(File Sharing) தளங்களைப் பற்றி தெரிந்திருக்கும். அந்தத் தளங்களில் உள்ள கோப்புகளை தேடுவதற்கு அவை உள்ளமைந்த தேடல் இயந்திரத்தை கொண்டிருக்கவில்லை. யாரேனும் கோப்பு பகிர்வு இணைப்புகளை தருவதன் மூலம் கோப்புகளை நாம் தரவிறக்க முடியும்.

மேற்சொன்ன கோப்பு பகிர்வுத் தளங்களில் தேடுவதற்கென  இணையப் பக்கங்களும் உண்டு.

எந்தவித இணையப் பக்கத்தின் துணையுமில்லாமல் கூகிள் தேடல் இயந்திரத்தை மாத்திரம் பயன்படுத்தி நாம் இது போன்ற கோப்பு பகிர்வுத் தளங்களில் தேடமுடியும். அது குறித்து சிந்திப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

imageஏதேனும் பாடல் ஒன்றைத் தேட

 • site:www.mediafire.com mp3|wma

குறிப்பிட்ட பாடல் ஒன்றைத் தேட

 • site:www.mediafire.com mp3|wma "Yaaradi Nee Mohini"

ஏதேனும் காணொளி(video) ஒன்றைத் தேட

 • site:www.mediafire.com mp4|rm|wmv|flv|avi

.zip அல்லது .rar கோப்பினை தேட

 • site:www.mediafire.com rar|zip

விளம்பரம் [AD]

mediaFire-authorized-reseller_sm

MediaFire Pro Account உங்களுக்குத் தேவையெனில் என்னுடன் தொடா்பு கொள்ளுங்கள்.
உங்கள் கோப்புகளை இணையத்தில் சேமித்து பகிர்ந்து கொள்ள சிறந்தது MediaFire!

மேற்கண்ட தேடல் முறைகளைப் பயன்படுத்தி இலகுவாக மற்ற கோப்பு பகிர்வுத் தளங்களிலும் தேட முடியும்.

இதன் பொது வடிவம் இவ்வாறு அமையும்.

site:[தளத்தின் முகவரி] [கோப்புவகை1|கோப்புவகை2|கோப்புவகை3] [தேடற்சொல்]

நீங்களும் முயன்று பாருங்கள். தேடுங்கள் கண்டடைவீா்கள்…!

Friday, March 18, 2011

Google Map இல் ஒரு தந்திரம் (Trick)!

ஒரு இணையப் பக்கம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையும் பிரச்சனை என்ன என்பதையும் சொல்கிறேன். நான் ஒரு தொடா்பு கொள்ளல் பக்கம் (Contact Us) ஒன்றை செய்து கொண்டிருந்தேன். ஒரு படிவம் (Form), முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை  இணைத்து ஒரு பக்கம் தயார் செய்தேன். இறுதியாக Google Map இல் முகவரியைக் காட்டுமாறு செய்து அதற்கான நிரலையும் (Coding) எடுத்தேன். நிரலை இணைத்த பின் தான் பிரச்சனை விளங்கியது.

image

மேலுள்ள படத்தில் உள்ளவாறு “Last Updated by…..” என்பது வருவது தான் பிரச்சனை.

சரி இதற்கு தீா்வு என்ன என்று தேடிய போது கிடைத்ததை உங்களில் யாருக்கேனும் உதவலாம் என்று பதிவு செய்கிறேன்.

உங்களுக்கு Google Map ஐ பயன்படுத்தி வரைபடம்(Map) உருவாக்கத் தெரியுமெனில் நீங்கள் கீழுள்ள பெட்டிச் செய்தியை தவிர்க்கலாம். 

முதலில் சுருக்கமாக Google Map இல் ஒரு முகவரியை குறிப்பது எவ்வாறு என்று காண்போம். (Creating a Map)

 1. முதலில் http://maps.google.com/ ஐ உங்கள் இணைய உலாவியில் திறந்து கொள்ளுங்கள்.
 2. Sign in என்ற இணைப்பை கிளிக் செய்து உள் நுழையுங்கள். (உங்களிடம் கூகிள் கணக்கு இருக்கவேண்டும்.)
 3. இடது பக்க பகுதியில் My Maps என்பதை கிளிக் செய்யுங்கள்

  image
 4. Create my map என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். (மேலுள்ள படம் பார்க்க)
 5. ஒரு தலைப்பு(title) மற்றும் அதைப்பற்றிய சிறு விளக்கம்(Description) இறுதியாக Public அல்லது Unlisted என்பதை தெரிவு செய்யுங்கள்.  

  image
 6. வலது பக்கத்தில் காணப்படும் Add a placemark என்பதை தெரிவு செய்து வரைபடத்தில் (Map) எந்த இடத்தை குறிக்க விரும்புகிறீா்களோ அதில் கிளிக் செய்யுங்கள்.

  image
 7. பின் அதற்கு வேண்டிய தலைப்புக் கொடுத்து Description என்ற பகுதியில் முகவரியை அல்லது சிறு விளக்கத்தைக் கொடுத்து OK பொத்தானை அழுத்தி சேமியுங்கள்.
 8. கடைசியாக இடது பக்கத்தில் உள்ள Done என்ற பொத்தானை அழுத்துங்கள்.
 9. இப்போது நீங்கள் ஒரு வரைபடத்தை தயார் செய்து விட்டீா்கள்
 10. தயார் செய்த படத்தை உங்கள் இணையப் பக்கத்தில் இணைக்க Link என்பதை கிளிக் செய்து Paste HTML to embed in website என்பதற்கு கீழ் உள்ள நிரலை பிரதி செய்து தேவையான இடத்தில் ஒட்டி விடுங்கள்.

  image

சரி இப்போது “Last Updated by…..”  என்பதை எப்படி இல்லாமல் செய்வது என்று காண்போம்.

 • நீங்கள் உருவாக்கிய வரைபடத்தில் (Map) இருக்கிறீா்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் திறந்து கொள்ளுங்கள். (My Maps ஐ கிளிக் செய்து வரைபடத்தை திறக்கவும்)
 • View in Google Earth என்பதை வலது கிளிக் செய்து கொள்ளுங்கள். Copy link address என்பதை கிளிக் செய்து இணைப்பை பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.
 • புதிய ஒரு tab இல் http://maps.google.com/ பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
 • திறந்தபின் அதன் தேடல் பெட்டியில் (Search Box) நீங்கள் பிரதிசெய்ததை ஒட்டி Search Maps என்ற பொத்தானை அழுத்தி தேடுங்கள்.
 • நீங்கள் உருவாக்கிய வரைபடம் திறந்து கொள்ளும். இப்போது மேலே படி நிலை 10 (Step 10) இல் காட்டிவாறு வரைபடத்திற்கான நிரலை பிரதி செய்து உங்கள் இணையப் பக்கத்தில் ஒட்டி விடுங்கள். அவ்வளவு தான்.

  image

 

ஆக இந்தப் பதிவில் Google Map இல் ஒரு வரைபடத்தை எப்படி உருவாக்குவது என்றும் உருவாக்கிய வரைபடத்தில் “Last Updated by…” என்பதை இல்லாமல் செய்வது எப்படி என்றும் கண்டோம்.

ஏதேனும் விதத்தில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவி இருந்தால் ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்குப் போடுங்கள். Winking smile

Tuesday, March 15, 2011

தானாகவே மென்பொருட்களை நிறுவுதல் - Ninite

இந்தப் பதிவு ஒலி வடிவில் (பரிசார்த்த முயற்சி)

[தரவிறக்க இங்கே அழுத்தவும்]

நீங்கள் புதிதாக ஒரு கணினி வாங்கினாலோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் கணினியை மீளத் தயார் படுத்துவதாக இருந்தாலோ (Formatting & Re-installing) ஒரு விசயத்தை அடிக்கடி செய்திருப்பீா்கள். அதாவது உங்களுக்கு தேவையான மென்பொருட்களை இறு வட்டு (CD/DVD) மூலமோ அல்லது இணையத்தில் இருந்து தரவிறக்கியோ ஒவ்வொன்றாக நிறுவியிருப்பீா்கள்.

இவ்வாறு உங்களுக்கு தேவையான மென்பொருட்களை ஒவ்வொன்றாக நிறுவும்போது எத்தனை தடவை Next … Next… கிளிக் செய்திருப்பீா்கள். சில மென்பொருட்களில் உதிரியாக ஏதாவது கருவிப்பட்டையோ (Toolbar) வேறு தேவையில்லாத மென்பொருளோ (Junk software) சோ்ந்திருப்பதால் அந்த மென்பொருளை நிறுவும்போது அவையும் நிறுவுப்படும் சந்தா்ப்பம் அதிகம். இதனை தவிர்க்க மென்பொருளை நிறுவும் வேளையில் நீங்கள் விழிப்பாக இருந்து அவற்றிற்கான தெரிவை நீக்கவேண்டும்.

ஆனால் இவற்றை எல்லாம் நிவா்த்தி செய்து உங்களுக்கு இலகுவான நிறுவல் அனுபவத்தை தருவதற்கு ஒரு இணையம் இருக்கிறது (எனக்குத் தெரிந்து).

இதில் என்ன சிறப்பு என்றால் உங்களுக்குத் தேவையான மென்பொருட்களை நீங்கள் தெரிவு செய்து Get Installer என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் தரவிறக்குவதற்கான(நீங்கள் தெரிவு செய்த மென்பொருட்களை) தனி இணைப்புக் கிடைக்கும். தரவிறக்கிய பின் அந்தக் கோப்பை நிறுவுவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த அனைத்து மென்பொருட்களும் ஒன்றன் பின் ஒன்றாக தானாகவே நிறுவப்படும். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை.

image

இதன் மூலம் கிடைக்கும் வசதிகள்

 • Next ஐ கிளிக் செய்ய வேண்டிய தேவையில்லை
 • கருவிப்பட்டைகளோ தேவையில்லாத மென்பொருட்களோ நிறுவப்படா
 • எப்போதும் அண்மைய பதிவுகளை நிறுவுதல் (Up-to-date)
 • தேவையெனில் மென்பொருளை தானாக புதுப்பிக்கிறது. (Update)
 • எந்தவிதமான இணைதலையும் செய்யவேண்டியதில்லை (No signup)
 • 32-bit மற்றும் 64-bit எது உங்கள் கணினிக்கு ஏற்றதோ அதை நிறுவுதல்
 • உங்கள் கணினி மொழியில் நிறுவல்

இது வரை இந்த அந்த என்று சொன்ன அந்த இணையம் இது தான் - http://ninite.com/

image

நிச்சயமாக உங்களுக்கு இது உதவும். எங்கேயும் தேடி அலையாமல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தேவையானவற்றை நிறுவி விடலாம்.

விண்டோசுக்கு மட்டுமல்லாமல் லினக்ஸ் இயங்கு தளத்திற்கும் தேவையான மென்பொருட்களை இவ் இணையம் வழங்குகின்றது.

Saturday, March 12, 2011

ஜிமெயில் ஆலோசனைகள்(tips)

பலரின் விருப்பத்திற்குரிய மி.அஞ்சல் சேவையாக ஜிமெயில் வலம் வருகிறது. புதிய மாற்றங்களோடு எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.

இந்தப் பதிவில் நான் படித்த சில ஜிமெயில் ஆலோசனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. ஜிமெயில் குறுக்கு வழிகள் (Shortcuts)

குறுக்கு வழிகள் (வாழ்க்கையில் அல்ல Winking smile) எப்போதும் உங்கள் நேரத்தை சேமிப்பதுடன் வேகமாக செயல்படவும் உதவுவன. அந்த வகையில் ஜிமெயில் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி வேகமாக உங்கள் மின்னஞ்சல்களோடு விளையாட முடியும். முதலில் ஜிமெயில் குறுக்கு வழிகளை செயற்படுத்தவேண்டும். அதற்கு Mail Settings சென்று Keyboard shortcuts on என்பதை தெரிவு செய்யவேண்டும். அவ்வளவு தான் இனி நீங்கள் புகுந்து விளையாடலாம்.

image

சில குறுக்கு வழிகள்: 

 • Inbox இனுள் மேல்/கீழ் (Up & Down) செல்வதற்கு – முறையே “k” மற்றும் “j”
 • மின்னஞ்சலை திறக்க – “o”
 • மறுமொழி இட - “r”
 • புதிய மின்னஞ்சலை உருவாக்க - “c”

எந்த நேரத்திலாவது உங்களுக்கு குறுக்கு வழிகளின் பட்டியல் தேவையெனில் “?” என்ற விசையை அழுத்தினால் அந்தப் பட்டியல் கிடைக்கும். (பட்டியலை மறைக்க “esc” விசையை அழுத்துங்கள்.)

2. ஜிமெயிலினுள் தேடல் – சிறு கட்டளைச் சொற்களின் துணையுடன்

சாதாரணமாக நாம் தேடும்போது ஏதாவது சொற்களைக் கொண்டு தேடுவோம். அப்படியில்லாமல் சிறு கட்டளைச் சொற்களைக் (operators) கொண்டு துல்லியமான தேடல்களை மேற்கொள்ள முடியும். உதாரணமாக சாம் அனுப்பிய இணைப்புகளை(attachments) கொண்ட  மின்னஞ்சல்களை தேடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு நீங்கள் தேடல் பெட்டியினுள் from:sam has:attachment என்று தட்டச்சு செய்து தேடலாம். இது மிகத் துல்லியமான தேடலாக அமையும். நேரமும் விரயமாகாது.

மேலதிகமாக கட்டளைச் சொற்களின் பட்டியலைக் காண இங்கே அழுத்தவும்.

3. ஒரு மின்னஞ்சல் முகவரி – பல வடிவங்களில்

பொதுவாக ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியின் வடிவம் username@gmail.com என்று அமையும். இதனை சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் வெவ்வேறான மின்னஞ்சல் முகவரிகளாக மாற்றமுடியும். அதாவது உங்கள் பயனா் சொல்லுக்கு பக்கத்தில் “+” ஐ சோ்த்து அதற்குப் பின் வேறு சொற்களை அல்லது இலக்கங்களை சோ்ப்பதன் மூலம் புதிய மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்க முடியும்.

உதாரணமாக ulagam@gmail.com என்ற மி.அ முகவரியை ulagam+junk@gmail.com என்றோ ulagam+personal@gmail.com என்றோ மாற்றமுடியும்.

இப்படி மாற்றிய மி.அ முகவரிக்கு அனுப்பப்படும் மி.அஞ்சல்கள் உங்கள் முகவரிக்கே வந்து சேரும். நீங்கள் அவற்றைப் பிரித்து (filter) அவற்றிற்கு லேபிள் ஒன்றைத் தரமுடியும்.

4. மி.அஞ்சல்கள் உங்களுக்கு மட்டும் அனுப்பப் பட்டதா என்பதை அறிதல்

சில நேரத்தில் உங்களுக்கு மட்டும் முகவரியிட்டு மி.அஞ்சல்கள் வரும். வேறு சமயத்தில் பத்தோடு பதினொன்றாக உங்கள் முவரியையும் சோ்த்து மி.அஞ்சல் வரும். மின்னஞ்சலை திறக்காமல் பார்த்த உடனே இதனைக் கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு நீங்கள் Mail Settings சென்று Personal level indicators என்பதில் Show indicators என்பதை தெரிவு செய்யவேண்டும்.

image

“>” என்று குறிக்கப்படும் மி.அஞ்சல்கள் மற்றவா்களோடு சோ்த்து உங்களுக்கு அனுப்பிய மி.அஞ்சல்களாகும்.

“»” என்று குறிக்கப்படும் மி.அஞ்சல்கள் உங்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டவை ஆகும்.

image

5. மி.அஞ்சலினுள் பல கோப்புகளை இணைத்தல் (attachments)  

பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்புண்டு. நீங்கள் பல கோப்புகளை ஒரே நேரத்தில் இணைக்க முடியும். இதற்கு ஒரு கோப்பினை தெரிவு செய்த பின் “ctrl” விசை அழுத்திய வண்ணம் மற்றக் கோப்புகளை தெரிவு செய்யவேண்டும். கோப்புகள் எல்லாம் ஒரே வரிசையாக தொடராக இருந்தால் முதலாது கோப்பை தெரிவு செய்த பின் “shift” விசை அழுத்தி தொடரில் கடைசிக் கோப்பை தெரிவு செய்யவேண்டும். அவ்வளவு தான்!

 

வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

Thursday, March 10, 2011

Gmail இல் கையொப்பம்–குரோம் நீட்சி!

இது தொடா்பாக ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அந்தப் பதிவில் நீங்கள் நெருப்பு நரி (Firefox) உலாவி பயன்படுத்துபவா் எனில் அதில் இயங்கக்கூடிய WiseStamp நீட்சி (Extension) பற்றி குறிப்பிட்டுள்ளேன். அந்த நீட்சியைப் பயன்படுத்தி கையொப்பத்தை ஜிமெயிலில் இணைக்கமுடியும்.

அந்தப் பதிவினை யாரேனும் படிக்க விரும்பினால் அவா்களுக்காக  இணைப்பைத் தருகிறேன்.

சரி இந்தப் பதிவும் அது தொடா்பானது தான். ஒரே ஒரு வித்தியாசம். அதாவது இந்த நீட்சி Google Chrome உலாவியில் இயங்கக்கூடியது. இந்த நீட்சியை நீங்கள் நிறுவுவதன் மூலம் Google Chrome உலாவியில் இருந்தவாறு ஜிமெயிலில் உங்கள் கையொப்பத்தை இணைக்க முடியும்.

image

வேறு என்ன செய்யலாம்?

 • உங்களுக்கு பிடித்தவாறு கையொப்பத்தை உருவாக்கி கொள்ளலாம். அதாவது  விரும்பிய எழுத்துரு, எழுத்துருவின் அளவு, வண்ணம் மற்றும் படங்களை கொண்டு கையொப்பத்தை வடிவமைக்கலாம்.
 • சமூக வலைத்தளங்களை உங்கள் கையொப்பத்தோடு இணைக்க முடியும். உதாரணமாக Twitter ஐ இணைப்பதன் மூலம் நீங்கள் அதில் கடைசியாக எழுதிய செய்தியை உங்கள் கையொப்பத்தோடு இணைக்க முடியும்.
 • ஒன்றுக்கு மேற்பட்ட கையொப்பங்களை பயன்படுத்தலாம். உதாரணமாக தனிப்பட்ட மின்னஞ்சல்களில் ஒரு வித கையொப்பத்தையும் உத்தியோகபூா்வ மின்னஞ்சல்களில் வேறு மாதிரியான கையொப்பத்தையும் பயன்படுத்தலாம். 

தரவிறக்க…

image

மற்றும்படி இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் என் அலட்டலைக் குறைத்து முடிக்கிறேன்.

Wednesday, March 9, 2011

தெரிந்து கொள்ளவேண்டிய Google தந்திரங்கள்!

கூகிள்(Google) இணையத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இணையத்தில் அது எடுக்கும், எடுத்து நிற்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கூகிள் வழங்கும் சேவைகளான மின்னஞ்சல் (Gmail), யுடியூப் (You Tube) ஆகியன பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான கூகிள் வழங்கும் இணைய சேவைகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் பயன்மிக்க சில சிறப்பியல்புகளை(Features) சுட்டிக் காட்டுவது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

 • எல்லா வகையான கோப்புகளையும் (Files) இணைய மேலோடியினுள் (Browser) பார்வையிடல்.

Google Docs Viewer என்ற இணையப் பக்கதிற்கு சென்று நீங்கள் பார்வையிட விரும்பும் கோப்பின் முகவரியை தருவதன் மூலம் அதனைப் பார்வையிட முடியும். எந்தக் கோப்புகளைப் பார்வையிடலாம் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கு அழுத்துங்கள்.

image

பொதுவாக ஜிமெயிலில் உங்களுக்கு இணைப்புகள் (Attachments) அனுப்பப்பட்டிருப்பின் அவற்றை தரவிறக்காமல் பார்வையிடுவதற்கான வசதியை ஜிமெயில் வழங்குவதை பலரும் அறிந்திருக்கலாம். (படம் பார்க்க)

image

 • கோப்பு ஒன்றினை பார்வையிடுவதற்கான முகவரியை அனுப்புதல்

மேலே குறிப்பிடப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தி ஒரு கோப்பிற்கான முகவரியை உருவாக்கி அதனை மற்றவா்களோடு பகிர்வதன் மூலம் அவா்கள் அந்தக் கோப்பினை பார்வையிட முடியும்.

இதன் மூலம் உருவாக்கப்படும் முகவரி இவ்வாறு தொடங்கும்.

http://docs.google.com/viewer?url=

இதன் பின் பகுதியில் உண்மையில் பார்வையிட வேண்டிய கோப்பின் முகவரி இடம்பெறும்.

உதாரணமாக கோப்பின் முகவரி - http://rubicon73.tripod.com/sitebuildercontent/sitebuilderfiles/alyx_sig.psd (இது ஒரு Photoshop கோப்பு)

இதனை பார்வையிடுவதற்கான முழுமையான முகவரி

http://docs.google.com/viewer?url=http://rubicon73.tripod.com/sitebuildercontent/sitebuilderfiles/alyx_sig.psd

 • http இற்குப் பதிலாக https ஐ பயன்படுத்தி பாதுகாப்பாக கூகிளின் சேவைகளை பயன்படுத்தல்.

பொதுவாக கூகிளின் சேவைகளை http இற்கு “s” சோ்த்து பயன்படுத்த முடியும். உதாரணமாக மேலே சொல்லப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தும் போது http://docs.google.com/viewer இற்குப் பதிலாக https://docs.google.com/viewer மூலம் இதனை அணுகலாம்.

ஜிமெயிலை பயன்படுத்தும் போது எப்போதும் https ஐ பயன்படுத்துமாறு மாற்றி அமைப்பதன் மூலம் பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தலாம். இதனைச் செய்வதற்கு உங்கள் ஜிமெயிலின் Mail Settings சென்று Always use https என்பதைத் தெரிவு செய்யவும்.

image

 • உங்கள் மின்னஞ்சல்(அதாவது Gmail) எப்போது எங்கிருந்து எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ளுதல்

கடைசியாக உங்கள் Gmail எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ள Gmail ஐ திறந்து கீழே சென்று Details என்பதை கிளிக் செய்து கடைசி 10 முறை எவ்வாறு அணுகப்பட்டது என்று பார்க்கலாம்.  (ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அணுகல் இருப்பின் கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது.)

image

 • கூகிளின் சேவைகள் தடையின்றி இயங்குகின்றனவா என்று தெரிந்து கொள்ளல்

சில நேரங்களில் கூகிளின் சேவை ஒன்று ஒழுங்காக அல்லது முற்றாக வேலை செய்யாமல் எம்மை வெறுப்பிற்கு உள்ளாக்கும். கூகிளின் சேவைகள் வேலை செய்கிறதா என்று பார்க்க Google Apps Status Dashboard இற்குச் செல்லுங்கள்.

இப்படி இன்னும் பல உண்டு. பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.

Saturday, March 5, 2011

Windows Live Writer இல் Blogger Page!

நீங்கள் வ.பூ(Blog) எழுதுபவரா? நீங்கள் கூகிளின் Blogger வ.பூ சேவையை பயன்படுத்துபவரா? வ.பூ எழுதும் கருவியாக Windows Live Writer ஐ பயன்படுத்துபவரா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயன்படும் என்று நம்புகிறேன்.

விசயத்திற்கு வரும் முன் Windows Live Writer ஐ பயன்படுத்தி வ.பூ எழுதுவது எப்படி என்று யாராவது அறிய விரும்பினால் கொம்பியூட்டா் உலகத்தில் ஏற்கனவே இதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். அதனைப் படியுங்கள். அதற்கான இணைப்புகளை கீழே வழங்குகிறேன்.

சரி இந்தப் பதிவில் நாங்கள் பார்க்கவிருப்பது Windows Live Writer(WLW)  ஐ பயன்படுத்தி Blogger இல் பக்கம் (Page)  ஒன்றை வெளியிடுதல். நீங்கள் கீழே உள்ள படத்தை பார்த்தால் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது WLW ஐ பயன்படுத்தி இதனை நேரடியாக செய்ய முடியாது.

image

பிறகு எப்படி செய்வதாம் என்று நீங்கள் கேட்பீா்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போலத் தான் இதுவும்.

முதலில் WLW இல் உங்கள் பக்கத்தை தயார் செய்யுங்கள். பின் கீழே படத்தில் காட்டியவாறு Post draft to blog என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

இதன் மூலம் நீங்கள் முடிவுறாத பதிவு (Draft)  ஒன்றை உங்கள் வ.பூவில் பிரசுரித்து விட்டீா்கள்.

image

அடுத்து நீங்கள் அந்த முடிவுறாத பதிவைத் திறந்து கொள்ளுங்கள் (அதாவது Edit ஐ கிளிக் செய்து).  திறந்தவுடன் பதிவுகளை மாற்றும் பகுதிக்கு (Edit Posts)  செல்வீா்கள். 

பின் Edit HTML என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவுக்குரிய Coding ஐ பார்க்க முடியும். எல்லாவற்றையும் தெரிவு செய்து (Ctrl + A) நகல் எடுத்துக் கொள்ளுங்கள் (Ctrl + C).

image

பின் Edit Pages என்பதை கிளிக் செய்து NEW PAGE என்ற பொத்தானை அழுத்துங்கள்.

image

அடுத்து வரும் பகுதியில் பக்கத்திற்கு ஒரு தலைப்பை கொடுங்கள்(Page Title). கீழ் உள்ள பெட்டியில் நீங்கள் நகல் எடுத்ததை ஒட்டி விடுங்கள்(Ctrl + V). இதன் போது நீங்கள் Edit HTML என்பதை தெரிவு செய்துள்ளீா்களா என்று கவனியுங்கள்.

இறுதியாக PUBLISH PAGE என்ற பொத்தானை அழுத்தி உங்கள் பக்கத்தை பிரசுரியுங்கள். அவ்வளவு தான் நீங்கள் ஒரு அழகான பக்கத்தை தயார் செய்து பிரசுரித்து விட்டீா்கள்.

இது தொடா்பாக ஏதேனும் கேட்க விரும்பினால் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

போக முன்…

தமிழகத்தில் தோ்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது(இலங்கையிலும் தான்) வாக்குப் போட்டு பழகுங்கள் இப்போதே… Winking smile

Wednesday, March 2, 2011

இணைய வேகத்தை அதிகரிக்க…

உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும்.

உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை.

விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது.

இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது…

Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள்.

பின்,  நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidth என்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.

image

அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் விரும்பிய பட்டை அகலத்தை(Bandwidth) கொண்டுவரலாம்.

image

மாற்றங்களை செய்த பின் OK பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமியுங்கள். இனி உங்கள் இணைய பட்டை அகலத்தை 100% முழுமையாக நீங்கள் பயன்படுத்தலாம்.

Tuesday, March 1, 2011

கரைச்சல் தரும் இரைச்சல்!

இணையத்தில் யாகூ மெசஞ்சா், விண்டோஸ் லைவ் மெசஞ்சா், கூகிள் டோக் அல்லது ஸ்கைப் ஆகிய தொடா்பாடல் மென்பொருட்களில் குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றை பயன்படுத்தாதவா் இல்லை என்றே கூறலாம்.

இப்படி ஏதாவது ஒன்றை பயன்படுத்துபவா்கள் ஒலித் தெளிவுடன் மற்றவா்கள் பேசுவதை கேட்க முடியாமல் அவஸ்தை படுவதை கேள்விப்பட்டிருப்போம் அல்லது நாமே அனுபவித்திருப்போம். எமது பேச்சோடு பின்புலச் சத்தமும் (Background noise) சோ்ந்து ஒரு வித இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இதனால் கேட்பவா் எரிச்சல் அடைகிறார்.

இதனை நிவா்த்தி செய்ய என்ன வழி? பின் புலச் சத்தத்தை இல்லாமல் செய்து சிறந்த ஒலித் தெளிவை தருவதற்காக பல்வேறு மென்பொருட்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.

அவ்வாறான மென்பொருட்களில் நான் சிறந்தாக உணா்கின்ற மென்பொருளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

அந்த மென்பொருள் Solicall Pro.

சரி இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்(Install) கொள்ளுங்கள்.

(விண்டோஸ் 2000,XP,Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் நிறுவலாம்.)

image

நிறுவிய பின் உங்கள் System Tray இல் அதன் சின்னம் (Icon) வந்திருக்கும். அதனை இரட்டை கிளிக்(Double Click) செய்து திறந்து கொள்ளுங்கள்.

image

பின் Tools – > Options… ஐ கிளிக் செய்யுங்கள்.

image

தோன்றும் தொடா்பாடல் பெட்டியில் (Dialog Box) இல் Audio In மற்றும் Audio Out ஆகியவற்றை தெரிவுசெய்யுங்கள்.

Recording Enabled என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் ஒலிப்பதிவு(Recording) செய்யும் போது இரைச்சலை தவிர்க்கமுடியும்.

image

இறுதியாக உங்கள் தொடா்பாடல் மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்தல் வேண்டும். உதாரணமாக ஸ்கைப்பில் (Skype) செய்யவேண்டியதை பார்ப்போம்.

ஸ்கைப்பை திறந்து Tools—> Options… ஐ தெரிவுசெய்து வருகின்ற தொடா்பாடல் பெட்டியில் Audio Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் ஒலிவாங்கி (Microphone) மற்றும் ஒலிபெருக்கி (Speakers) ஆகியவற்றை தெரிவு செய்யவேண்டும்.

image 

அவ்வளவு தான். இனி உங்கள் தொடா்பாடல் இனிமை நிறைந்ததாக அமையும். Smile

குறிப்பு : இந்த மென்பொருள் 14 நாட்களுக்கு மட்டுமே இலவசம். 14 நாட்கள் முடிந்தபின் அந்த மென்பொருளை அகற்றிவிட்டு (Uninstall) மீண்டும் நிறுவுங்கள். திரும்பவும் 14 நாட்கள் உங்களுக்கு கிடைத்துவிடும். எப்பவும் ஓசியாகவே காலத்தை ஓட்டலாம்(என்னை மாதிரி)Winking smile !

பிடித்திருந்தால் ஒரு ஓட்டு! இல்லாவிட்டால் ஒரு குட்டு!

Related Posts Plugin for WordPress, Blogger...